- குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான்.
- சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.
குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப்பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரலை கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்தபட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்க வைக்கும் எண்ணத்துக்கும் வந்து விடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது.
7,8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.
அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன பேய் கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம்.
நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள். இப்போது ஸ்மார்ட் போன் தொந்தரவு வந்துவிட்டதால், தங்கள் பிள்ளைகளை தனியறையில் தூங்கவைத்தால் திசைமாறிபோய் விடுவார்களோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள். ஆனாலும் சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.