- 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
- 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் ‘டிக்ளேர்’ செய்தது.
இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.
ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.