- அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள்.
- தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.
இளம் பருவத்தினரில் ஐந்தில் ஒருவர் மன நோய்க்கு ஆளாவதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. வாழ்வியல் முறைதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 10 வயதாகும் சுஜாதா, தந்தையின் பணி நிமித்தம் காரணமாக டவுண் பகுதியிலிருந்து மெட்ரோ நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்தாள். புதிய வீடு மற்றும் பள்ளி சூழலுக்கு தன்னை மாற்றிக்கொள்வதற்கு சுஜாதா ரொம்பவே சிரமப்பட்டாள்.
முந்தைய பள்ளியில் படித்த நண்பர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட வகுப்பு தோழர்களுடன் பழக வேண்டியிருந்தது. அது அவளின் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வந்த பிறகும் பள்ளிச் சூழலில் இருந்து மீள முடியாமல் தவித்தாள்.
மகளின் சுபாவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்த தாயார், அதுபற்றி கேட்டபோது ஆரம்பத்தில் முறையாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட பிறகு, சில மாணவர்களின் செயல்பாடுகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகுவதை ஒப்புக்கொண்டாள். சுஜாதாவை போன்று இளம் பருவத்தில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
10 முதல் 20 சதவீதம் வரையிலான இளம் பருவத்தினர் மன நலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாவதை உலக சுகாதார நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. எனினும் அவர்களுக்கு முறையான மன நல ஆலோசனை வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அறியாமை, சமூக நிலைமை, மன நலம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக கவலை, மனச்சோர்வு, தற்கொலை சிந்தனை, பசியின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவை தலைதூக்குகின்றன.
நண்பர்களிடையே நட்பை பேணுவதில் சுமுக நிலை இல்லாமை, படிப்பு விஷயத்தில் பெற்றோரின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்களும் பதின்ம வயதினரிடத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. அவர்களிடத்தில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள்:
* உங்கள் வீட்டில் உள்ள பதின்ம வயதினரின் நலனில் நீங்கள் அக்கறை கொள்வதை அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி செயல்படுங்கள். அன்பு, பாசத்தை வெளிப்படுத்துங்கள்.
* அவர்கள் கூறும் யோசனைகளை காது கொடுத்து கேளுங்கள். நல்ல யோசனைகளாக இருந்தால் மனதார பாராட்டுங்கள். அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுங்கள். அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கு நீங்கள் பக்கபலமாக இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
* அவர்களுடன் குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தை செலவிடுங்கள்.
* அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.
* அவர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் கொடுங்கள். நீங்கள் பின் புலத்தில் பக்கபலமாக இருப்பதை உறுதிபடுத்துங்கள். தேவைப்பட்டால் மன நல ஆலோசகர், மருத்துவரை அணுகி சுமுக தீர்வு காணுங்கள்.