அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால், பெண்ணொருவர் தனது கணவனை விவாகரத்துச் செய்துள்ளார்.
கெய்ல் மெக்கோர்மிக் (73) என்ற பெண் சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். இவரது கணவர் பில் மெக்கோர்மிக் (77) கும் சிறைக் காவலரே! 1980ஆம் ஆண்டு இருவரும் ஒரே சிறையில் பணியாற்றும்போது காதல் மலர்ந்தது. கல்யாணமும் நடந்தது.
இந்த நிலையில், கடந்த வருடம் விருந்தொன்றின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாகவே தனது வாக்கைப் பதிவுசெய்யப் போவதாக பில் தன் நண்பரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெய்ல் பில்லை விவாகரத்துச் செய்தார்.
“பில்லுக்கும் எனக்கும் இடையில் பல முரண்பாடுகள் இருந்து வந்தன. வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும் என்றபடியால் நான் அதைச் சட்டை செய்யவில்லை. மேலும், அவர் அரசியல் பேசும்போது எனக்கு உடன்பாடில்லாத விடயங்களைப் பேசுகையில் அங்கிருந்து நான் எழுந்து விடுவேன்.
“ஆனால், எல்லா விடயத்தையும் அப்படி விட்டுவிட முடியாது. ட்ரம்ப்புக்கு ஆதரவான அவரது பேச்சுத்தான் எனக்குள் அடங்கியிருந்த வெறுப்பை பில் மீது கொட்டச் செய்தது. ஆனால் இது அவசரமாக எடுத்த முடிவு அல்ல. இருவரும் குடும்ப நல ஆலோசனை பெற்றோம். பாதிரியார் ஒருவர் மூலம் எனது மனதை மாற்றவும் முயற்சித்தேன். ஆனால் அது எதுவும் பலன் தரவில்லை.
“இருவருக்கும் வயதாகிவிட்டதால் நிச்சயமாக எமது நிலைப்பாடுகளில் இருந்து நாம் மாறப்போவதில்லை. எனவேதான் நாம் விவாகரத்துச் செய்துகொண்டோம்” என்று கூறுகிறார் கெய்ல்!