அதிமுகவின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்காலிக பொதுச்செயலராக உள்ள சசிகலாவுக்கு தம்மை நீக்கும் அதிகாரம் இல்லை என கூறி வருகிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தற்போதைய நிலையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக உடைந்து போயுள்ளது.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு அதிமுகவின் பொருளாளர் என்ற அடிப்படையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், அதிமுக பொருளாளராகிய என்னுடைய அனுமதி இல்லாமல் அதிமுக வங்கி கணக்குகளில் எந்த பரிவர்த்தனையும் நடைபெற கூடாது.
அதிமுகவின் பொதுச்செயலர் பதவி காலியாகவே உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலர் முறைப்படி இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை.
ஆகையால் அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.