மேலதிக பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கிலுள்ள நலன்புரி முகாம்களை மூடுவதே இவ் விஜயத்தின் பின்னணியாகும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சாடியுள்ளார்.
அத்தோடு, மக்களுடைய காணிகளை நிரந்தரமாக பறித்து ராணுவத்திடம் கொடுக்கும் செயற்பாட்டிற்காகவும் மேலதிக பாதுகாப்புச் செயலர் வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று யாழ். செல்லும் மேலதிக பாதுகாப்புச் செயலர், வடக்கின் மீள்குடியேற்ற நிலைமைகள், படையினர் வசமுள்ள காணிகள் மற்றும் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக ஆராயவுள்ளார். அத்தோடு, யாழ். அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடாகியுள்ளது. இவ் விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விஜயத்திற்கு எதிராக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்திருந்த போதும், இன்றைய சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தமது எதிர்ப்பு நடடிக்கைகள் அமையுமென சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அங்கீகரித்த பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இல்லாவிட்டால் படை முகாம்கள் மற்றும் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.