படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 10ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
விமானப்படைத் தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி அம்மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நேற்று வரை தீர்வு கிடைக்காத நிலையில், தாம் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்தை நேற்று முதல் மறியல் போராட்டமாக மாற்றி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல்கலைக்கழக சமூகத்தினர், வேறு பிரதேச மக்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என சகலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இக் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பிரதமருடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.