சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாஸ்தா என்றால் சாப்பிட அழைக்காமலேயே சாப்பிடுவதற்கு அமர்ந்து விடுவார்கள்.
பாஸ்தாவில் இன்று சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரிப்பன் வடிவில் இருக்கும் மேக்ரோனி – ½கப்
மூக்கடலை அல்லது ராஜ்மா (நம் விருப்பத்திகேற்ப) – ½கப்
வெங்காயம் (விருப்பமிருந்தால்) – சிறியது 1
தக்காளி சிறியது – 1
தேங்காய் துருவியது – சிறிதளவு
தாளிக்க கடுகு, உளுந்து, – சிறிதளவு
மிளகாய் (ஃப்ளோக்ஸ்) – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கடலை அல்லது ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும். அடுத்தநாள் குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
மேக்ரோனியை அகலமான அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து விட்டு உடனே குளிர்ந்த நீரில் இரண்டுமுறை அலசினால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
இப்பொழுது வானலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு அத்துடன் பெருங்காயத்தூளையும் தூவி சிறிது உ.பருப்பு கலர் மாறியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து, அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு, வேக வைத்த மூக்கடலை அல்லது ராஜ்மாவையும் அத்துடன் மிளகாய் ஃப்ளோக்ஸ் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மேக்ரோனியை கலந்து மிகவும் லேசாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து பரிமாறலாம்.
இந்த மேக்ரோனி சுண்டலைக் கட்டாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் மிளகு தூள் சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.