முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சசிகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த உடன் மதிய சாப்பாடு கொடுக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட உடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராயப்பேட்டையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு இறுதியாக கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
சசிகலாவை முதல்–அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கும் வரையிலும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக பஸ்களில் அழைத்து சென்று தங்கவைப்பது முதல் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வளர்மதி, நிலோபர் கபில், ராஜலட்சுமி, சரோஜா மற்றும் சில அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு செல்வதாக தகவல் பரவியது. அதன்படி பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 22 பேர் விமான நிலையத்துக்கு தங்கள் உடமைகளுடன் வந்திருந்தனர். கடைசி நேரத்தில் டெல்லிக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “கிட்டத்தட்ட கடத்தப்பட்டதுபோல் சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட 131 எம்.எல்.ஏ.க்கள் பற்றிதான் எனது எண்ணங்கள் விரிகின்றன. ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? சிறைச்சாலையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அதிகாரமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.