‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் காதல் ஜோடியாக நடித்த ஜெய் – அஞ்சலி, நிஜத்திலும் காதலர்களாக மாறிவிட்டதாக அவ்வப்போது கோலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்து, அதன்பிறகு அப்படியே அடங்கிப் போய்விடும். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு மீண்டும் இவர்கள் காதலர்களாகவிட்டார்களோ? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதாவது, ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் தோசை சுடுவதை வைத்து மூன்று பெண்கள் உரையாடிக் கொண்டுவருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதை வைத்து படத்திற்கு புரோமோஷன் செய்வதற்காக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களது வீட்டில் தோசை சுட்டு, அவர்களது மனைவிக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு கொடுப்பதுபோல் புகைப்படம் எடுத்து, அதை டுவிட்டரில் பதிவு செய்து வந்தார்கள்.
நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டுக் கொடுப்பதுபோன்ற புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெய்யும் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு தோசை சுட்டுக் கொடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அவர் தோசை சுட்டுக் கொடுத்தது வேறு யாருக்குமல்ல, இவருடைய காதலியாக பேசப்பட்டு வரும் நடிகை அஞ்சலிக்குத்தான். இவர் தோசை சுடுவது போல் இருக்கும் புகைப்படம் ஒரு வீட்டில் இருப்பதுபோல் தெரிகிறது. எனவே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களோ என்ற கேள்வியை கோலிவுட் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.
இன்னொரு பக்கம், இருவரும் தற்போது ‘பலூன்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். எனவே, அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலிக்காக, ஜெய் சுட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, இவர்கள் இருவரும் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.