நெருக்கடி நேரத்தில் உதவி
இந்த சவாலான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போது ஐரோப்பிய தூதுவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்த உறுதியான செய்தி, இலங்கைக்கு சர்வதேச சமூகம் உதவுவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும் என தூதுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
75 வீத மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள்
நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள் மற்றும் அவர்களில் 75% மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உரம் மற்றும் எரிபொருளை வழங்குவதன் மூலம் உணவு விநியோகம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணி பிரச்சினைக்கு தீர்வாக விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமையை கருத்திற்கொண்டு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ராஜபக்ச, விளக்கினார்.
இந்தநிலையில் முதலீடு, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், இலங்கைக்கான பிரான்ஸ் தூதர், இத்தாலி தூதர், நோர்வே தூதுவர், நெதர்லாந்து குடியரசு தூதுவர். ஜேர்மனியின் துாதுவர், துருக்கியின் துாதுவர், இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஆகியோர் இந்த துாதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.