அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ச அருங்காட்சியகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது இடிக்கப்பட்ட நினைவாலயத்தை புனரமைப்பதற்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதற்காக பொறுப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ நினைவாலயம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரியினால் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொருத்தமற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கல், மணல், சீமேந்து, மரப்பலகைகள் மற்றும் நிதியுதவி என எவ்வகையிலும் பெற்றுக் கொண்டு அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என உயர் பொலிஸ் அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரி மாளிகைக்கு வந்த சிலர், அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட சொத்துக்களில் இந்த அருங்காட்சியகம் மற்றும் நினைவுச்சின்னமும் அடங்கும்.
சொத்துக்களைப் பாதுகாக்க முடியாததால் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்களின் கோபத்திற்குள்ளானதாகக் கூறப்படும் உயர் அதிகாரி தனது இடமாற்றத்தை தடுக்கவே இவ்வாறு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் காரணமாகப் பொருட்களையும், பணத்தையும் வசூலிப்பதில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.