- இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
- கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார்.
சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப மரம் உள்ளது. அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு முதலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெறுகின்றனர். தீர்த்தத்தை பருகுவதால் அம்மை நோய் விரைவில் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
திருமண வரம் வேண்டும் இளம்பெண்கள், தாலிப்பொட்டை அம்மன் காலடியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனை வணங்கி, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர்.