அந்நியச் செலாவணி வருவாயில் 60% க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில், பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை முதல் 3 வாரங்களுக்கு, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், பொதுமக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், நாளை முதல் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.