நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் னக்க் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சில யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த யோசனைகள் மக்களின் முன் வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
21 நாட்களின் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அதன் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அநீதியான முறையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும்
செலவுகளை ஈடு செய்து கொள்ளக்கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலக சந்தை விலைகளை கருத்திற் கொள்ளாது இலங்கையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக விலைமனுக் கோரல் பொறிமுறைமைகளை பின்பற்றாது எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.