இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நெருக்கடி நிலை காரணமாக பலர் வேலை வாய்ப்பினை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மோசடி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணபரிமாற்ற சேவைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த அவதானத்துடன்,செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கி வரிசைகளில் காத்திருக்கும் மோசடி கும்பல்
வங்கிகளில் பணத்தினை பெறுவதற்காக வரிசைகள் காத்திருக்கும் போது பின்னால் வரிசைகளில் காத்திருப்பது போன்று சில மோசடி கும்பல்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்தி பணத்தினை களவாடி செல்லும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இது தொடர்பில் அவதானத்துடன், செயற்படுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தினை பெற்ற ஒருவர் அச்சுறுத்தப்பட்டு பணத்தை தர மறுத்த நிலையில், சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.