தென்னிலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இலங்கையின் சுற்றுத்துறைக்கு பெரும் சவால் நிலை ஏற்பட்டுள்ளது.
காலி சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு பொலிஸார் எரிபொருள் வழங்க மறுத்தமை தொடர்பில் இலங்கை சுற்றுலா சபை, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி
அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சிறு குழந்தையுடன் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு, அங்கு கடமையில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எரிபொருளை வழங்க மறுத்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வேறு எவருக்கும் எரிபொருளை வழங்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமையவே இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரியின் பொறுப்பற்ற செயல்
இலங்கைக்கு பயணம் செய்யுங்கள் ஆனால் எரிபொருள் வழங்க முடியாதென குறித்த அதிகாரி சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த , இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சி உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மீள முடியாத கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா சபை பரிசோதகர், பொலிஸ் மா அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து கடிதம் அல்லது காணொளிச் செய்தியை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சுற்றுலா சபை கோரிக்கை விடுத்துள்ளது.