- கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்தார்.
- இதன்மூலம் லாராவின் 19 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் பும்ரா 83வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83 ஓவரில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பும்ரா.
பிராட் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து ‘வைடு’ முறையில் 5 ரன்களை பெற்றுத் தந்தது. நோ பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.
இதன்மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய லெஜண்ட் வீரர் பிரையன் லாராவின் சாதனையை கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.