எரிபொருள் சேமிப்பு வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை மேலும் குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்த விமான நிறுவனங்கள் எரிபொருளைப் பெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடுமையான பாதிப்பு ஏற்படும்
இலங்கைக்கான விமான சேவைகள் மேலும் குறையும் பட்சத்தில் சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே இந்த நிலைமையை சமாளிக்க தற்போதுள்ள விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இப்பிரச்சினைக்கு தீர்வாக, விமான நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.