பிபில மற்றும் மெதகம பகுதியில் பரவிய இன்புலுவன்ஸா ஏ.எச்1.என்1 முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த நோய் தாக்கம் காரணமாக 30பேர் வரையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நான்கு கர்ப்பிணிப் பெண்கள், ஐந்து சிறுவர்கள் உள்ளடங்களாக இவ்வாறு 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது இரத்த மாதிரி பொரளை வைத்திய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலர் வீடு திரும்பியுள்ளதாகவும், நோயாளர்களுக்கான மருந்துகளை குறைவின்றி தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.