வெஸ்ட் இண்டீசின் ரோவ்மென் பாவெல் அதிரடியாக ஆடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் தனி ஆளாகப் போராடி 68 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து 57 ரன்னி அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரோவ்மென் பாவெல் அதிரடியில் மிரட்டினார். அவர் 28 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நிகோலஸ் பூரன் 34 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அபிப் ஹொசைன் 34 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிப் அல் ஹசன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.