சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, “அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ஊடகங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தன. உண்மை நிலையை அறிய விரும்புகிறோம். இன்று பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து ஒரு அறிக்கையை நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தோம். எவ்வாறாயினும் அவ்வாறானதொன்று நடைபெறவில்லை’ என லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார்.
அத்தோடு, இந்த தேசத்தின் மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதால், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.