சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 29ஆம் திகதி பாதுகாப்புச் செயலகத்திற்கு இந்தக்கடிதம் கிடைத்துள்ளது.
இந்தக் கடிதத்தில் ஜுலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள கரும்புலிகள் தினத்தை இலக்கு வைத்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று வடக்கில் அல்லது தெற்கில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புலனாய்வு ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள் என்றும் கருப்பு ஜூலையை இலக்குவைத்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வதற்கு எந்த அடிப்படைத் தகவலும் இல்லை என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்களால் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதற்கும் வன்முறையைத் தூண்டலாம் என்றும் அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், பெறப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கை குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், உயர்தர பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சசு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அன்றாடப் பணிகளைத் தொடருமாறும் அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.