பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலும் என்னை பிரதமராக நியமிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது அறிக்கையின் ஒரு பகுதியை மாத்திரமே பிரதமர் எடுத்துக்கொண்டதாக தெரிவித்த அனுர, மக்களின் அடிப்படைத் தேவைகளான எரிபொருள், எரிவாயு, மருந்து போன்றவற்றை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றே தான் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது தனக்கோ பிரதமராக செயற்படுவதற்கான ஆணை இல்லை என்றும் ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் அமரக்கூட ஆணை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நான்கு தசாப்த கால தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பினால் பாழடைந்த பொருளாதாரத்தை ஆறு மாதங்களுக்குள் புத்துயிர் பெற முடியாது என்றும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண நிலையான மற்றும் நம்பகமான அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் கலாசாரத்தின் நீண்டகால தோல்வி காரணமாக நாடு கடுமையான பொருளாதார கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த பொருளாதார வீழ்ச்சியில் செல்வாக்கு செலுத்திய இந்த அரசியல் கலாசாரம் முதலில் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்றும் கடன் நெருக்கடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை, உற்பத்தி சரிவு மற்றும் மாநில வருவாய் என்பனவற்றை ஆறு மாதங்களுக்குள் சரி செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.