காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலர் பேருந்துகளில் வந்தவண்ணமுள்ள நிலையில், குறித்த பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்போது மணிக்கூட்டு கோபுரத்தின் அருகிலிருந்து பேரணியாக மக்கள், விபுலானந்தா விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளனர். அங்கு, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எழுச்சியுரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.