இலங்கையின் அடிப்படை பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70% ஆக உயரக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த கணிப்புகளின்படி, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் கணிசமாகக் குறையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடமிருந்து பெறப்படும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பரிவர்த்தனை வசதி உட்பட இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஜூன் மாத இறுதிக்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.