இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதி மற்றும் விற்பனையில் பாரிய இலாபத்தை ஈட்டியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்திற்கோ, திறைசேரிக்கோ செல்லவில்லை. மாறாக பாரிய நிதிச்சுமைகளைக் கொண்ட பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கே செல்கின்றது.இதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய இலாபத்தை ஈட்டியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல்
அதிக விலையை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வசூலித்தாலும், எரிபொருள் கொள்வனவுக்கு, அதனிடம் நிதி இல்லை. இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களில், குறிப்பாக கடந்த 45 நாட்களில் இரண்டு எரிபொருள் விலை திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் பீப்பாய் ஒன்று 157 அமெரிக்க டொலர்களுக்கும், ஒக்டேன் 95 அமெரிக்க டொலர் 158க்கும், டீசல் பீப்பாய் ஒன்றுக்கு 174 அமெரிக்க டொலர்களுக்கும், சுப்பர் டீசல் பீப்பாய் ஒன்றுக்கு 176 அமெரிக்க டொலர்களுக்கும், மண்ணெண்ணெய் பீப்பாய் ஒன்று 171 அமெரிக்க டொலர்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்திலிருந்து (SLCD) கிடைத்த தகவலின்படி, ஒரு பீப்பாய் மண்ணெண்ணெய் 105 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எரிபொருளின் நிர்ணய விலை
ஒரு பீப்பாய் டீசல் 111 அமெரிக்க டொலர்களுக்கும், ஒரு பீப்பாய் உராய்வு எண்ணெய் 75 அமெரிக்க டொலர்களுக்கும், ஒரு பீப்பாய் பெற்றோல் 100 அமெரிக்க டொலர்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்டது.
இருப்பினும்,பெட்ரோலிய கூட்டுத்தாபனம்,எரிபொருள் சூத்திரத்தின் படி, அதிக விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு லீற்றர் எரிபொருள் இறக்குமதிக்கு 50 ரூபாவுக்கும் குறைவான வரியை அரசு வசூலிக்கின்றது.
எனினும் கூட்டுத்தாபனம், ஒரு லீற்றரை 171 முதல் 258 ரூபாவுக்கு அதிக இலாபத்துடன் விற்பனை செய்கிறது. எனவே, விலை நிர்ணயம் சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய, அமைச்சர்கள் அல்லது ஆர்வமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், திறைசேரி, மத்திய வங்கி, உள்ளூர் வங்கிகள், ஆகியவை பரிசீலிக்க வேண்டும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.