பெண் நினைத்தால் எந்தப் பையனையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ காதலில் விழவைக்க முடியும்? ஆனால், பசங்க..? ‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க… ப்ளீஸ்!’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடமே காலில் விழாத குறையாகக் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
இந்த வருடக் காதலர் தினம் முதல் ‘க்ரீன் சிக்னல்’ கிடைப்பதற்கான சக்சஸ் டிப்ஸ் வழங்குகிறார்… தமிழகத்தின் ‘லவ்வர் பாய்’ ஆர்யா!
”நம்ம பசங்க எல்லாம் பொதுவா ஒரு தப்பு பண்ணுவாங்க… ஒரு மூணு ஃபார்முலா மட்டுமே வெச்சுக்கிட்டு, அது மூலமாவே காதலை சக்சஸ் பண்ணிரலாம்னு நினைப்பாங்க.
ஆனால், ஒரே ஃபார்முலா எல்லா நேரமும் வொர்க்-அவுட் ஆகாது. நான் சிம்பிளா பத்து விஷயம் சொல்றேன். அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கங்க. காதல்ல அரியர் வைக்காம பாஸ் ஆகிடலாம்!”
நல்லவன்போல நடிப்பது:
”காலங்காலமா நம்ம பசங்க பண்றதுதான். ஆனா, இது ரொம்பத் தப்புங்க. நாம கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்ம கேரக்டரை நேர்மையா சொல்லிடணும். ‘நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிறவன்’தான் மோசமான ஆளா இருப்பான்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் தெரியும்!”
அழகான பொண்ணாச்சேனு தயக்கம்:
”இது மட்டும் இருக்கவே கூடாது பாஸ். தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கானு, அவ ரேஞ்சுக்கு சல்மான் கானையும் சிம்புவையுமா தேட முடியும்.
அந்தப் பொண்ணு படிக்கிற இடத்துல, பழகுற இடத்துல யார் இருக்காங்களோ, அவங்கள்ல ஒருத்தனைத் தான் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும். ஸோ, தயக்கம் தவிர்!”
பார்த்தவுடனேயே காதல் சொல்வது:
”ஒரு பொண்ணைப் பார்த்ததும் நமக்கு பல்பு எரியலாம். ஆனா, காதலை உடனே சொல்லக் கூடாது. ஏன்னா, லவ்வுங்கிறதே ஒரு லாங் டைம் ப்ராசஸ்.
அதே சமயம் ‘இதயம்’ முரளி ரேஞ்சுக்கு இழுத்துட்டே இருக்கவும் கூடாது. ஒருவேளை அந்தப் பொண்ணு அடுத்த ஃப்ளைட்ல அமெரிக்கா போறானா, அப்ப யோசிக்காம… உடனே லவ் சொல்லிடு!”
காதலுக்கு ஓ.கே. சொல்லலைனா…:
”அக்செப்ட் பண்ணிட்டா ஓ.கே. இல்லைன்னா, ‘நோ பிராப்ளம்’னு விட்டுடணும். கட்டாயப்படுத்தினா காதல் வர்றதைவிட, கண்டுக்காமவிட்டா பின்னாடி காதல் வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம்.”
ஈகோவுக்கு வளைந்து கொடுப்பது:
”எந்தப் பொண்ணுகிட்டயும் சின்னதாவோ பெரிசாவோ ஒரு ஈகோ இருக்கும். அந்த ஈகோவை க்ளாஷ் பண்ணிட்டு கரெக்ட் பண்றதுலதான் த்ரில்லே இருக்கு.
‘நம்ம ஈகோவையே காலி பண்ணவன் இவன்’னு பொண்ணு மனசுல ஒரு நினைப்பு வந்தால்தான், உங்க மேல காதல் அதிகரிக்கும்.”
வசதியான காதலன்:
”தன் லவ்வர் பைக், கார், ஐபோன் வெச்சிருக்கணும்னு தெளிவான பொண்ணுக யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்த்தா, அந்தப் பொண்ணு நம்ம லைஃபுக்கு வேண்டாம் நண்பா!”
பொசஸிவ்னெஸ்:
”காதல், கல்யாணத்துக்கு அப்புறமும் வாழ்க்கை முழுக்கக் கடைபிடிக்க வேண்டிய லைஃப்லாங் ரூல் இது. நம்ம லவ்வர் கிட்ட இன்னொரு பொண்ணைப் பத்தி பாசிட்டிவோ, நெகட்டிவோ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசக் கூடாது. வேணும்னா, நம்ம அம்மா பத்தி, அவங்க அம்மா பத்திப் பேசிக்கலாம்!”
வெளியே அழைத்துச் செல்வது:
”பெண்களுக்கு பிரைவஸிதான் பிடிக்கும். கூட்டமான இடங்கள் பிடிக்காதுன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கோம்.
ஆனா, கூட்டமான இடங்களுக்குப் போறப்போ, அவங்களை நாம எப்படிப் பாதுகாப்பா கூட்டிப் போயிட்டு வர்றோம், பத்திரமாப் பார்த்துக்குறோம்னு அவங்க கவனிப்பாங்க!”
கலகல பேச்சு:
”இதுதாங்க ரொம்ப முக்கியம். இதை மட்டுமே வெச்சுதாங்க என் பொழப்பு ஓடுது. காமெடினு நினைச்சுட்டு நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம்.
ஆனா, அதை அவங்க ரசிக்கிறது முக்கியம். சிலருக்கு மொக்கை போட்டாக்கூடப் பிடிக்கும். சிலருக்கு ஃபீலிங்ஸாப் பேசினா பிடிக்கும். எது பிடிக்கும்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசுங்க!”
அடிக்கடி ஐ லவ் யூ:
”அது கட்டாயம். தினமும் குறைஞ்சது 100 தடவையாச்சும் ‘லவ் யூ… லவ் யூ…’ சொல்லிட்டே இருக்கணும். அதுதான் உங்க காதலின் ஹெல்த்துக்கான விட்டமின்!
கடவுள் எல்லா மனுஷங்களுக்கும் கொடுத்த காஸ்ட்லி பரிசுதான் காதல். அதை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட் பாஸ்!”