இலங்கை அரசியலமைப்பு மற்றும் நீதி சேவை சம்பிரதாயத்திற்கு புறம்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்டத்தினை அடுத்து இது தவறான விடையம் என நீதிமன்ற சேவைகள் சங்கத்தின் செயலாளர், கல்கிசை நீதிவான் எம்.எம்.எம்.மிஹால்லினால், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த கடிதத்தில் இந்த நியமனத்தினை திருத்திக் கொள்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 03 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கூடிய நீதிமன்ற சேவைகள் சங்கத்தின் நிறைவேற்று சபையின் அவசர குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஜனாதிபதியிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு தனிப்பட்ட வகையில் சட்டத்தரணி தொழிலில் ஈடுபட்டுவருபவரை, நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது அரசியலமைப்புக்கும், நீதிமன்ற சம்பிரதாயத்திற்கும் ஒவ்வாத செயற்பாடு என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.