பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர்.
அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் வழங்கிய உரத்தை இன்று (10) பெற்றுக்கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்வேன் என மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இதேநேரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்த பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் நோக்கில் தமது பதவிகளில் இருந்து விலகியதாக கூட்டறிக்கையொன்றை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் தீவிரமாக பங்களித்ததாகவும் அத்தகைய முடிவை எட்டும்போது தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.