நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்களின் அதிகாரத்தை பிரதிநிதித்துப்படுத்தும் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் முன்னிலை சோசலிசக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த மக்கள் பேரவையானது தேசிய மட்டத்தில் மாத்திரமின்றி பிரதேச மட்டத்திலும் பல பேரவைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டிற்குள் உடனடியாக அரசியல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
புதிதாக யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் போராட்டகாரர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
மக்கள் தமது பலத்தை அமைதியான முறையில் பயன்படுத்திய சந்தர்ப்பம்
இந்த சந்தர்ப்பமானது மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கும் அப்பால் சென்று அமைதியான முறையில் தமது இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்திய சந்தர்ப்பம்.
2019 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் சதித்திட்டங்கள் மூலம் 69 லட்சம் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மக்கள் விரட்டியுள்ளனர்.
மறுபுறம் அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. 20வது அரசியலமைப்புத்திருத்தச் சட்டத்தின் மூலம் முக்கியமான அரசியல் அதிகாரங்களை பெற்றிருந்தார்.
இலங்கை மற்றும் உலக வரலாற்று திருப்புமுனை
சர்வாதிகாரத்தை நோக்கியும் மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடிக்கும் நாட்டை கொண்டு சென்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க நாட்டு மக்கள் தமது பலத்தை பயன்படுத்திய சந்தர்ப்பம்.
இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்பது போலவே உலக வரலாற்றிலும் மிக முக்கியமான திருப்புமுனை எனவும் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.