பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகளை மேற்கொள்ளவும் ஜனநாயக ரீதியற்றவகையில் செயற்படுவதற்கும் ரணில் தனக்குக் கிடைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்கிறார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படியே மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தயவு செய்து மக்களின் குரலுக்கும், மக்களின் அபிலாசைகள், நோக்கங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவசரக்காலச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு அடக்குமுறையான சட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எவ்வாறான அடக்குமுறை தேவைகள் இருந்தாலும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் எந்தவொரு உத்தரவுகளுக்கும் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினரும் செவிசாய்க்கக்கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
மக்களின் பக்கம் முப்படையினர் நிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்ணீர்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்கள் உள்ளிட்ட தாக்குதலை மக்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டாம். அதுபோல உங்களது ஆயுதங்களையும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.