தமிழக ஆளுநர் வித்யாசாகர ராவை சந்திக்க நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், சசிகலாவுக்கு மாலை 7.30 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது ஆளுநர் அவர்களிடம் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
ஆளுனரை முதலில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு உண்மைகளை அவரிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 20 நிமிடம் நீட்டித்த இந்த சந்திப்பின் போது, அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சசிகலா தரப்பு முன்கூட்டியே வெத்துப்பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டதாகவும், தற்போது அவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் , அவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தாமல் எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்று ஓ.பி.எஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சென்ற சசிகலாவுடன் அரை மணி நேரம் பேசியுள்ளார். அப்போது சசிகலா ஆளுநரிடம் I Stake claim என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறியுள்ளார். அதன் பின்னர் அவருடன் சென்றிருந்த அமைச்சர்கள் மற்ற விஷயங்களை ஆளுநரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னர் சசிகலா கையில் வைத்திருந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவுப் பட்டியலையும், சட்டமன்ற தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் அமைச்சர்கள் கொடுத்துள்ளனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆராய்ந்து தமது முடிவை விரைவில் அறிவிப்பதாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .