தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் முதல்வராக பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா ஏற்பாடுகளும் நடைபெற்றன.
இந்த சூழ்நிலையில், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, அதுவரையில் சசிகலா பதவியேற்பை ஒத்திவைக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்தனர்.
இதுபற்றி டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ‘தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பதில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, விரைவில் முதல்வராக உள்ளார். அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்நிலையில், அவரை முதல்வராக தேர்வு செய்வது சரியாக இருக்காது. அவர் முதல்வர் பதவியேற்க தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுதாரான டிராபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.