மாணவர்கள் கல்விக்காக பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட நிலையில் பாடசாலைகளில் நிலவும் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படாதிருப்பது பாரதூரமான பிரச்சினையாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பொன்விழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கமைய, நிதியொதுக்கீடுகளை செலவிடவேண்டிய முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வி அமைச்சு தலையீடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் மாகாண சபைகளுக்கான நிதி தேவைக்கு அதிகமானது என்பதனால் அதனை வேறு விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில மாகாண கல்வி அமைச்சர்கள் கேட்கின்றனர்.
அந்தளவுக்கு நிதி கிடைத்திருந்தும் பெரும்பாலான மாகாண பாடசாலைகளில் கழிவறைகள், தளபாட தேவைகள் முழுமைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
1967 ஆம் கொழும்பில் பிரபல ஆண்கள் பாடசாலைகளில் நிலவிய நெருக்கடிக்கு தீர்வாக ஐ.எம்.ஆர்.ஈரியகொல்ல அவர்களது தலைமையில் கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
அதனை குறுங்காலத்தினுள் மிகவும் பிரபலமான ஆண்கள் பாடசாலையாக மாற்றுவதில் அக்கல்லூரியின் முதலாவது அதிபர் ஐ.ஆர்.ரி.அலஸ் வெற்றி பெற்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.