வடமாகாணத்திற்கான குடிநீர் மற்றும் நீர்வழங்கல் தொடர்பாக சிறப்பு அமர்வு ஒன்றிற்கான விவாதம் நடைபெற்று இறுதியில் எதிர்வரும் 23ஆம் திகதி மேற்படி விடயம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 84ஆம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது வடமாகாணத்திற்கான குடிநீர் மற்றும் நீர்வழங்கல் தொடர்பாக சிறப்பு அமர்வு ஒன்றை நடத்துமாறு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் தம்மிடம் எழுத்து மூலமாக கேட்டுள்ளதாகவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும் மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும், மேல் நீதிமன்றிலும் குடிநீர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளமையினால் இந்த விடயத்தை விவாதிக்க வேண்டாம். என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,
நாம் தனியே குடிநீர் தொடர்பாக மட்டும் பேசவில்லை. வடமாகாணத்திற்கான குடிநீர் மற்றும் நீர்வழங்கல் தொடர்பாகவே விசேட அமர்வை நடத்தும்படி கேட்டிருக்கின்றோம்.
மேலும் இரு வழக்குகள் நிலுவையில் காணப்படவில்லை ஒரு வழக்கு நிறைவடைந்திருக்கின்றது. என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கூறுகையில் அண்மையில் 3 நாட்கள் வட மாகாணத்தின் நீர் கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கான மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட கொள்கையின் படி இந்த விவாதத்தை நடத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் அந்த கொள்கையின் சுருக்கத்தையேனும் சபைக்கு சமர்பிக்கும்படியும் 23ஆம் திகதி சிறப்பு அமர்வு நடக்கும் எனவும் அவை தலைவர் அறிவித்துள்ளார்.