காதல் பூக்கும் தருணம் என்பது யாராலும் கணிக்க முடியாதது. கண்ணசைவில் காதல் மொழிகள் பரிமாறப்பட்டு விடும். கோயில் திருவிழா, உறவினர் இல்லம், பஸ் நிலையம் என முதலில் பார்த்தவுடன் பிடித்துப்போன பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு இளைஞர்கள் என்னவெல்லாமோ செய்து பார்ப்பர்.
நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழம்புகிறீர்களா?
உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்:
« முதல் சந்திப்பு ஒரு பரீட்சை மாதிரி. முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும்.
இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து கொள்ள வேண்டும். சாதாரணமான கேள்விகளுக்கு இடமளிக்காமல் சுவையான, தனித்தன்மையான கேள்வி பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!
« மிக எளிமையான வழி என்னவென்றால் காதலிக்க நினைக்கும் பெண்ணைப் பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்தி வருகிறது என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
« அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.
« அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
« கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.
« கொஞ்சம் அன்றாடச் செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவாரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.
« முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.
எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும்.
« அவர்களின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா!
« அவர்கள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளாரா என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள்.
« அவர்கள் நாய், பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்!
« அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.
« இருவருக்கும் பொதுவான விஷயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விஷயத்தை வெளிக்கொணருங்கள்.
எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விஷயங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது