தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே நேற்று தமிழில் செய்திகளைத் தேடியவர்களின் முக்கிய தேடுதலாக இருந்தது. அண்மைக் காலங்களில் தமிழ்ச் செய்திகளுக்கான முதன்மை இடமாக தமிழகத்தின் அதிரடி நிகழ்வுகளே வலம் வந்தன.
ஜெயலலிதா, அப்பலோ, ஜெயலலிதா மரணம்,வர்தா புயல் அதையடுத்து ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல விடயங்கள் முன்னணியில் வலம் வந்தன.
நேற்றைய `வைரலாக` சசிகலா- பன்னீர்ச்செலவத்தின் முறுகலும், ஆளுநர் சந்திப்பும் செய்தித் தளத்தில் இடம்பெற்றன..
நேற்றைய கூகிள் செய்தித் தேடலில் நிச்சயமாக சசிகலாவும், பன்னீர்ச்செல்வமுமே முன்னணியில் இருப்பார்கள் என எல்லோரும் கருதினார்கள். ஆனால் அது உண்மையில்லை என்கிறது கூகிள். தமிழக தமிழர்கள் அதிகம் தேடிய விடயம் எது என்று கூகிளின் புள்ளிவிபரம் தந்திருக்கும் பதில் ஆச்சரியம் தந்திருக்கிறது. அடுத்த ஆட்சி யாரிடம், அடுத்த முதல்வர் யார் என்பதை விட தமிழக தமிழர்களின் கவனம் குவிந்திருந்தது சூர்யாவின் சிங்கம் –3 பற்றியதே.
உண்மை அதுதான் நேற்று அதிகம் தேடப்பட்டது சிங்கம்-3 தான். இரண்டாம் இடம் சசிகலாவுக்கும் மூன்றாம் இடத்தில் பன்னீர்ச்செலவமும் இருக்கின்றனர். ஆயிரம் பெரியார் வந்தாலும்……
அ.தி.மு.க அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் அதிரடி நீக்கம்
அ.தி.மு.க அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அ.தி.மு.க அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அ.தி.மு.க-வின் புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் இ.மதுசூதனன் இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ‘என்னை யாரும் நீக்க முடியாது, என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் சசிகலாவை நீக்கி விட்டேன்’ என்று தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதன் நேற்று (வியாழக்கிழமை) தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சசிகலா பதவியேற்க இருந்த அரங்கு கலைகிறது!!
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தை சுற்றிலும் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க அ.தி.மு.க., சட்டமன்ற தலைவர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்வம் ஆகியோர் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநர் இது தொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
எனவே ஆளுநரிடமிருந்து இதுவரையிலும் உறுதியான தகவல் ஏதும் வராததால், சென்னை பல்கலைகழக நூற்றாண்டு அரங்கத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சசிகலா அ.தி.மு.க., சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஆளுநரின் சென்னை வருகைக்கு பின்னர் உடனடியாக பதவியேற்கும் வகையில் சென்னை பல்கலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சசி பதவியேற்பதற்காக கடந்த 5ஆம் திகதி முதல் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். பின்னர் மெரினாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த செவ்வியின் பின் அரசியல் களம் தலைகீழாக மாறியது.