அம்மா சமாதி
பன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.
சசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.
அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.
அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.
சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.
நீ
பெரிய குளமென்றால்
நான்
மன்னார் குடி!
அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும் சின்னம்மா!
பேயைப் பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.
முதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!
பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.
பிணைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.எஸ்.
நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.
செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!
அதிமுகவில் சமீப நாட்களாக நடக்கும் அதிகார போட்டி குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் குறித்தும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் கவிதை இது.