தமிழக முதல்–அமைச்சராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் செந்தில்குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சொத்துக்குவிப்பு வழக்கு
சென்னையில் கடந்த 5–ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை அக்கட்சியின் சட்டசபை தலைவராக (முதல்–அமைச்சர்) தேர்ந்தெடுத்து முதல்–அமைச்சராக பதவி ஏற்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தரப்பு வக்கீல் 6–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட போது, அந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
பெங்களூரு தனிக்கோர்ட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கிய போது, அ.தி.மு.க. தொண்டர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தடை விதிக்க கோரிக்கை
தற்போது, சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்க அ.தி.மு.க. சார்பில் அவசரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் பதவி ஏற்ற ஒரு வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி, அது அவருக்கு பாதகமாக அமைந்தால், அ.தி.மு.க. தொண்டர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு, தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறும் வரை சசிகலாவுக்கு முதல்–அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்த அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
அத்துடன், தமிழ்நாட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், பெரும்பாலான அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒரு இடத்தில் சிறைவைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளிவரும் வரை முதல்–அமைச்சராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்த கோரிக்கைகளை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.