செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடக்கிறது.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் நேற்று வரை 9 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.
10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஒபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் தலா மூன்று அணிகள் விளையாடி வருகின்றன.
ஒபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் 10-வது சுற்றில் இந்திய ‘பி’ அணி முதலிடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்திய ‘பி’ அணியில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, சரின் நிஹல், சத்வானி ரானக், அதிபன் ஆகியோர் உள்ளனர். இந்திய ‘ஏ’ அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை அமெரிக்கா, அஜர்பைஜான் உள்பட 7 அணிகளுடன் பகிர்ந்துள்ளது.
இந்திய ‘சி’ அணி 12 புள்ளிகளுடன் 22-வது இடத்தில் உள்ளது. 10-வது சுற்றில் இந்திய ‘சி’ அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதுகிறது.
பெண்கள் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை போலந்து, கஜகஸ்தான், ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் பகிர்ந்துள்ளது. நேற்று நடந்த 9-வது சுற்றில் போலந்திடம் இந்திய ‘ஏ’ அணி தோல்வி அடைந்தது. அந்த அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இந்திய ‘ஏ’ அணி இன்று 10-வது சுற்றில் கஜகஸ்தானுடன் மோதுகிறது.
சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய ‘ஏ’ அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் இன்று களம் காணுகிறது. அந்த அணியில் கோனேருஹம், ஹரிகா, தானியா சச்தேவ், வைஷாலி, குல்கர்னி பாக்தி ஆகியோர் உள்ளனர்.
இந்திய ‘பி’ மற்றும் ‘சி’ அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று 7 அணிகளுடன் 10-வது இடத்தை பகிர்ந்து உள்ளன. 10-வது சுற்றில் இந்திய ‘சி’ அணி சுவீடனுடன் மோதுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் கடைசி சுற்று நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கடைசி சுற்று தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.