‘அமைதியான கடல், திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை’ என்பார்கள்.
‘கடவுள் நமக்கு இனிமையான வாழ்க்கையை மட்டுமே தருவார். சோதனைகளையும், துன்பங்களையும் அவர் தருவதில்லை’ என்பதே நம்முடைய இயல்பான சிந்தனை.
எளிதான, இனிமையான வாழ்வு கடவுளால் தரப்படும்போது கடவுளின் முழுமையான ஆசிக்குள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இறை அருளின், இறை கிருபையின் சில குறிப்பிட்ட பாடங்களை வேதனை மற்றும் துன்பங்களின் பள்ளத்தாக்கில் தான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.
சோதனைகளும் துயரங்களும் இல்லாத வாழ்க்கையைத் தான் நாம் விரும்புகிறோம், ஆனால் இறை வார்த்தைகள் நமக்குக் கற்றுத் தரும் சிந்தனையோ முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
ஒரு பாரம்பரியக் கதை உண்டு…
ஒரு அரசன் தனது ஆளுகைக்கு உட்பட்ட சாலை ஒன்றின் நடுவே ஒரு பெரிய கல்லை வைக்கிறார். அந்தக் கல்லை யாராவது நகர்த்துவார்களா என தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
வழியில் கல் கிடப்பதைப் பார்த்த சிலர் எரிச்சலடைந்தனர். சிலர் கோபமடைந்தனர். சிலர் வெறுப்படைந்தனர். சிலர் எதுவுமே நடவாதது போல விலகிச் சென்றனர். யாருமே அதைப் புரட்டி ஓரமாகப் போடவேண்டும் என நினைக்கவில்லை.
ஆனால் அந்தப் பக்கமாக வந்த ஏழைக் குடியானவர் ஒருவர், அதைச் சாலையின் ஓரத்துக்குத் தள்ள முயன்றார். வானத்தை அண்ணாந்து பார்த்து கடவுளின் ஒத்தாசையை சைகை மூலம் கேட்கிறார். மிகுந்த சிரமப்பட்டு அந்தக் கல்லை ஓரமாய்த் தள்ளி வைக்கிறார்.
கல்லைத் தள்ளியபின் பார்த்தால், அந்தக் கல் இருந்த இடத்திலே ஏதோ ஒரு பை இருக்கிறது. அந்தப் பை நிறைய பொற்காசுகள் இருக்கின்றன.
அந்தப் பையில் ஒரு குறிப்பு இருந்தது. ‘இந்தக் கல்லைப் புரட்டுபவர்களுக்கான அரசனின் பரிசு இந்தப் பொற்காசுகள்’ என அதில் எழுதப்பட்டிருந்தது.
குடியானவர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.
நமது ஆண்டவர் இயேசுவும் ஒவ்வொரு சோதனைக்கு அடியிலும் நமக்கு ஆசீர்வாதத்தைப் மறைத்து வைத்திருக்கிறார். வேதனைகளின் பள்ளத்தாக்கில் பயணிக்கும் போது தான் இவையெல்லாம் நமக்குக் கிடைக்கின்றன.
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இறைவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அவரோடு அன்பு கொள்ள வேண்டும். சோதனைகளும், வேதனைகளும் நமது வாழ்வில் வருவது இறைவன் நம் மீது கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்’ என சங்கீதம் 142:6 ல் தாவீது இறைவனை நோக்கிப் பார்க்கிறார்.
நாம் எப்போதுமே நமது சுய விருப்பத்தின் படி பயணிக்கும் இலகுவான வாழ்க்கையை மட்டுமே எதிர்பார்க்கிறோம்.
கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படியும் போது வாழ்க்கை சுமூகமாக அமையும் என நினைக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தால் தான் கடவுள் ஆசீர்வதிக்கிறார் எனவும் கருதிக்கொள்கிறோம்.
இடையூறுகளைச் சந்திக்கும்போதோ ‘ஐயையோ நான் கடவுளின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறோனோ’ எனவும் பயப்படுகிறோம்.
கீழ்ப்படியும் போது கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது உண்மை தான். ஆனால் அதே வேளையில் கடவுளின் பிள்ளைகளுக்கு அவர் சோதனைகளையும் அனுமதிக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. பிலிப்பியருக்கு அவர் எழுதிய திருமுகம், அவர் சிறைச்சாலையில் இருந்த போது எழுதப்பட்டது. தான் சிறைச்சாலையில் இருப்பதை அவர் தனது எழுத்தில் முன்னிறுத்தவில்லை. அந்தச் சூழலையும் பிறருக்கு நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
நெருக்கடிகளும், இடையூறுகளும் இறைவனை நோக்கிப் பார்ப்பதற்கானவையே, இறைவனை விட்டுப் பார்வையை விலக்குவதற்கானவை அல்ல. நமது ஆன்மிக வாழ்க்கை செழுமையாக இருக்க வேண்டுமெனில் நாம் இறைவனைப் பார்க்க வேண்டும்.
ஸ்டீபன் கான் ஒரு போதகர். அவருடைய பெற்றோர் அவரை ஏழு வயதிலிருந்தே இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ அவரைப் பழக்கியிருந்தனர்.
எனவே அவருடைய வாழ்க்கையில், ‘நான் ஒரு பொல்லாதவனாய் இருந்தேன், இப்போது நல்லவனாய் இருக்கிறேன்’ என்பது போன்ற சுவாரஸ்யமான புனைக்கதை இருக்காது. ‘அட அப்படி ஒரு சாட்சி நமக்கு இல்லையே, இருந்திருந்தால் பிறரை எளிதில் வசீகரித்திருக்கலாமே’ என அவர் அவ்வப்போது நினைப்பாராம். ஆனால் அவருடைய வாழ்க்கையே பிறருக்கு மிகப்பெரிய சாட்சியான வாழ்க்கையாய் அமைந்து விட்டது என்பது தான் உண்மை.
‘நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது’ எனும் இறை வார்த்தைக்கு ஏற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது.
நமது வாழ்க்கையைப் பற்றி நாம் கொண்டிருக்கிற திட்டங்களெல்லாம், வெறும் ஊகங்களும் அனுமானங்களும் மட்டுமே. ஆனால் இறைவனை நோக்கிப் பார்க்கும் போது நிகழ்கின்ற செயல்களெல்லாம் இறைவனின் திட்டங்களாகவே இருக்கும்.
எப்போதும் இறைவனையே பற்றிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இறை ஆசீர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.