தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
அதேசமயம், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள், ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்கு ஏற்ப, எதிரணியில் உள்ள முக்கிய தலைவர்கள் அவர் பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று முக்கிய தலைவர்கள் வந்து இணைந்துள்ளனர். அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி.க்களான பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோரைத் தொடர்ந்து, அமைச்சர் மாபா பாண்டியராஜனும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்துவிட்டார்.
இதனால், ஆளுநரை இன்று சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய சசிகலா, அவசரம் அவசரமாக கூவத்தூர் சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
இந்த கூட்டம் நிறைவு பெறும் தருவாயில், நேற்று வரை சசிகலாவுக்கு முழு ஆதரவை தெரிவித்த மூத்த தலைவர் பொன்னையன் திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஐக்கியமாகியிருக்கிறார். அவர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார். அவரது வரவு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு புது தெம்பை அளித்துள்ளது.