சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக உய்ரநீதிமன்ற வட்டாரங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததிருந்தது.
அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பினை வழங்கி இருந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் உயர்நீதிமன்றில் தீர்ப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு யூன் மாதம் 7 ஆம் திகதி இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இப்போது இந்த வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை (14 ஆம் திகதி ) இறுதி தீர்ப்பு வர உள்ளதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி மரணம் அடைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு கூறப்படும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.