தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் கொடுத்த பேட்டியானது தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுநாள் வரை தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யமாக இருந்த அ.தி.மு.க இரண்டு பிரிவாக உடைந்து நிற்கிறது.
”மக்கள் விரும்பினால் முதலமைச்சர் பதவியை மீண்டும் ஏற்பேன்” என்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இதற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்படி இல்லையென்றால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மட்டும் சசிகலாவை விட்டு வெளியே வந்து, அதனால் அ.தி.மு.க பெரும்பான்மை இழக்கும் நிலை ஏற்பட்டால் ஆட்சி கலையும். ஆனால், ”தன்னிடம் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் சட்டசபை கூடும்போது எனது பலத்தைப் பார்க்கலாம்” என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எங்கே தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வம் பக்கம் போய்விடுவார்களோ என பயந்து அவர்களை யாருக்கும் தெரியாமல் பஸ்ஸில் வைத்து சென்னையை சுற்றி ரவுண்ட் அடிக்க வைத்திருக்கிறார் சசிகலா.
பின்னர், சொகுசு பேருந்துகளில் கொண்டுசெல்லப்பட்ட 125-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முன்னரே புக் செய்யப்பட்ட கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ரிசார்ட் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூரில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் நீர்நிலைகளால் ஒரு தீவினுள் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் வகையில் இந்த ரிசார்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜில்லென வீசும் கடற்காற்றும் இந்த ரிசார்டின் பலம். இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய Tranquil Rooms (A Comfortable Solution), Bay Views Rooms (A Pleasant Stay), Paradise Suite Rooms (The Real Paradise on Earth) என மூன்று ரகமான அறைகள் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் அனைத்து விதமான விழாக்களுக்கும் தேவையான பார்ட்டி ஹால், டின்னர் ஹால் போன்ற அனைத்து விதமான வசதிகளும் கொண்ட மெகா சைஸ் ரூம்களும் இருக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல் ரிசார்ட்டை சுற்றியும் நீர்நிலைகள் இருப்பதால் படகின் உதவியால் நடமாடும் விருந்து, பொழுது போக்குக்காக ட்ரக்கிங் மோட்டார் சைக்கிள், மசாஜ் சென்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற அனைத்து வித சிறப்பம்சங்களும் கொண்டதாக இந்த கோல்டன் பே ரிசார்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இங்கு பணக்காரர்களும், சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து செல்வார்கள்.
இங்குள்ள ரூம்கள் ஒவ்வொன்றும் அதன் ரகத்துக்கு ஏற்றப்படியே வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Tranquil Rooms எனப்படும் மூன்றாம் தர சொகுசு ரூம்களின் வாடகை ஒரு நாளைக்கு 5,500 ரூபாயும், Bay Views எனப்படும் இரண்டாம் தர ரூம்களின் ஒருநாள் வாடகை 6,600 ரூபாயும், Paradise Suite Rooms எனப்படும் முதல் ரக ரூம்களின் வாடகை ஒரு நாளைக்கு 9,900 ரூபாயும் என்ற விகிதத்தில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர தண்ணீரில் நடமாடும் விருந்து, விழாக் கொண்டாட்டம் என ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மைகளைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்போது எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அனைத்து அறைகளும் புக் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!.