1988ஆம் ஆண்டு, சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய நிலையில் கடந்த 30 வருடங்களாக மரண அச்சுறுத்தலில் இருந்து வந்த இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நடந்த மேடை நிகழ்வொன்றில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
மரண அச்சுறுத்தல்
1988இல் வெளியிடப்பட்ட, இறைதூதர் நபி நாயகம் தொடர்பான சாத்தானின் வசனங்கள் என்ற நாவலை எழுதிய பிறகு பல ஆண்டுகளாக அவர் மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நியூ ஜெர்சி, ஃபேர்வியூவில் இருந்து ஹாடி மாதர் என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர், மேடைக்கு சென்று, ருஷ்டியையும் அவரை நேர்காணல் செய்பவரையும் தாக்கியதாக நியூயார்க் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது.
சல்மான் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்பதுடன் அவரது கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன மற்றும் அவரது கல்லீரல் குத்தப்பட்டு சேதமடைந்துள்ளது என அவரது பிரதிநிதியான ஆண்ட்ரூ வைலி தெரிவித்துள்ளார். எனினும் தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான அவர், உலங்குவானூர்தி மூலம் பென்சில்வேனியாவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பத்து வருடங்கள் மறைந்து வாழ வேண்டிய நிலை
இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் ருஷ்டி 1981இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் மூலம் புகழ் பெற்றார், இங்கிலாந்தில் மட்டும் இந்த நாவலின் ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.
எனினும் 1988இல் அவரது நான்காவது நாவலான – சாத்தானிக் வசனங்கள் – காரணமாக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அவர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நாவல் சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது, அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை என்று கருதி, சில நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.
புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் 1991இல் குத்திக் கொல்லப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் கத்தியால் குத்தப்பட்டார் மற்றும் புத்தகத்தின் நோர்வே பதிப்பாளர் சுடப்பட்டார் – ஆனால் இருவரும் உயிர் பிழைத்தனர்.
ருஷ்டிக்கு எதிரான கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மீது கல்லெறியப்பட்டது.
புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி தருஷ்டியை தூக்கிலிட எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.