ஜெயலலிதா மறைந்த பின், கட்சிக்கு ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இக்கட்டுகளை மீறி கட்சியை துரோகிகள் கைகளுக்கு சென்று விடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை, நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் பலரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர் என கட்சி மேலிடத்திற்கு தகவல் சென்று இருக்கிறது.
இந்நிலையில் அவர்களை சந்திப்பதற்காக சசிகலா இன்று நேராக சட்டசபை உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார்.
விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களிடம் பேசிய சசிகலா,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததும், நான் முழுமையாக ஒதுங்கிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
இருப்பினும், மூத்த தலைவர்களும்; நிர்வாகிகளும், உங்களை விட்டால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கு வேறு நாதி இல்லை என்று கூறி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
அ.தி.மு.க.,வில் இருக்கும் 1.5 கோடி தொண்டர்களையும் காப்பாற்றும் பொறுப்பு, எனக்கு பெரும் சுமைதான்.
ஆனாலும்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நம்பி வந்தவர்களை அவரின் மறைவுக்குப் பின், அப்படியே விட்டு விட்டு செல்ல எனக்கு மனம் வரவில்லை. அதனால்தான், கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்கே ஒப்புக் கொண்டேன்.
என்னை கட்சியின் பொதுச் செயலர் ஆக வேண்டும் என்றும்; தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்றும் நேரடியாகவே வலியுறுத்தியவர்கள் அவ்வளவு பேரும், இன்று, கருங்காலிகளோடு கைகோர்த்துள்ளனர்.
அவர்கள் தலைகீழாக நின்றாலும், ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக, நான் தான் பொறுப்பேற்பேன்.
என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் ஆயிரம் சொல்வார்கள். அதெல்லாவற்றையும், இங்கிருப்பவர்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம்.
நீங்களெல்லாம் தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு சிரமப்பட்டுள்ளீர்கள் என்று எனக்கும் தெரியும்.
அவற்றுக்கெல்லாம் முதல்கட்டமாகவே, ஒவ்வொருவருக்கும் நான் உதவிட வேண்டும் என நினைக்கிறேன்; உதவிடுவேன்.
எதிர்பார்ப்பில் முன்னே-பின்னே இருந்தாலும், யாரும் கவலைப்பட வேண்டாம்.
ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், உங்கள் யாரையும் நான் மறக்க மாட்டேன்; உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும்; மறக்காமல் செய்வேன் என்று மிக உருக்கமாக பேசியிருக்கிறார்.
நாளுக்கு நாள் சசிகலா தரப்பில் இருந்து முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.
சினிமா பிரபலங்கள், ஏனைய அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் என்று அத்தனை தரப்பினரும் முதலமைச்சர் பன்னீருக்கு ஆதரவாக இருக்க, இணையத்தள ஆய்வு முடிவுகளும் இப்பொழுது சசிகலாவிற்கு பாதகமான நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தனக்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும், அந்த பலத்தை தான் நிரூபித்துக் காட்டுவேன் என்றும் சசிகலா தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் முதலமைச்சர் பக்கம் சாய்ந்துவருவதால் தன்னுடைய கனவைப் பாதுகாப்பதற்கும்,
அதிகாரத்தைப் பெறவும் வேறு வழியின்றி சசிகலா சட்டசபை உறுப்பினர்களிடம் கெஞ்சிக் கேட்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இதேவேளை சட்டசபை உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் வெளியேற முடியாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில், நாளை தன்னுடைய போராட்டம் வேறு வடிவத்தில் இருக்கும் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் குறிப்பிட்ட சசிகலா,
ஆளுநர் மீதும், மத்திய அரசாங்கம் மீதும் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.