இலங்கை சகோதர சகோதரிகளுடன், இன்பத்திலும் துன்பத்திலும், பாக்கிஸ்தான் பங்கு கொள்கிறது எனவும் இது எதிர்காலத்திலும் தொடரும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் பாகிஸ்தானின் சுதந்திர வைர விழாவை இன்று (14) கொண்டாடியது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பாகிஸ்தானின் தேசியக் கொடியை, உயர்ஸ்தானிகர் ஏற்றி வைத்துள்ளதுடன் கடந்த மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள PNS தைமூர் என்ற பாகிஸ்தான் கப்பலை வரவேற்றார்.
இதன் பின்னர் உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையானது, ஸ்தாபக தந்தைகளின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தினார்.
எல்லா நாடுகளுடனும், குறிப்பாக அண்டை நாடுகளுடனும் சுமுகமான உறவுகளை தொடர்பில் பாக்கிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது என்று உயர்ஸ்தானிகர் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டும் சார்க் அமைப்பின் முக்கிய அங்கத்தினர்கள் என்றும், இரு நாடுகளும் நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் வலுவான பிணைப்புகளை கொண்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் இராஜதந்திரிகள், பாகிஸ்தான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உள்ளூர் உயரதிகாரிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள PNS தைமூர் கப்பலின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.