ஓ.பன்னீர்செல்வத்துக்கு திறமையின்மைக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை இல்லை என்றும், அவரே முதல்–அமைச்சராக நீடிக்கலாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
கமல்ஹாசன் கருத்து
நான் மிகவும் கவனமாகவே எனது கருத்துக்களை வெளியிடுகிறேன். காரணம் அரசியலில் சில காலமாக இருந்து கொண்டிருக்கின்ற வன்முறை கூட்டத்திடம் எனது வார்த்தைகள் சிக்கி விடக்கூடாது.
நான் வன்முறைக்கு வித்திடும் கோபம் எதையும் காட்டப்போவதில்லை. என்னிடத்தில் பல வருடங்களாக இருக்கின்ற கோபம் இப்போது எரிச்சலாக மாறி இருக்கிறது.
கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நான் பார்த்து வருகிறேன்.
நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை.
ஜனநாயகத்தின் உண்மை நிலையானது எங்களுக்கு கிடைக்கவில்லை. அதை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது.
நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல
நாங்கள் ஆட்டு மந்தைகள் அல்ல. எங்களை யாரும் மேய்க்க வேண்டாம். எங்களுக்கு தலைவர்கள் தேவையில்லை.
தேசத்துக்காக எங்களைப்போல் உழைக்கின்ற மக்கள்தான் வேண்டும் என்பதை குறிப்பிடவேண்டிய நேரமாக இதை கருதுகிறேன்.
தமிழகத்துக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து சிறந்த சேவை எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் என்று அழைப்பதா?, முன்னாள் முதல்வர் என்று அழைப்பதா? என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால், அவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகிய இருவர் மீதும் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு.
பன்னீர்செல்வம் ஏன் முதல்வராக நீடிக்கக்கூடாது
முதல்வராக பன்னீர்செல்வம் இப்போது பதவியில் இருக்கிறார்.
அவரது ஆட்சி நிர்வாகத்தில் சேதம், திறமையின்மை என்று எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.
அவர் ஏன் சிலகாலம் முதல்வராக நீடிக்கக்கூடாது. மக்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் நீக்கலாமே.
அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. மக்களின் ஏவலை செய்ய உதவும் ஒரு ஜனநாயக கருவிதான் அவர்.
பன்னீர்செல்வம் எனது நண்பர் இல்லை. அவரது ஆதரவாளர் கூட்டத்துடன் நான் இணையப்போவதும் இல்லை.
கடைசியாக அவரிடம் ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது பேசி இருக்கிறேன். அப்போது மக்களிடம் செல்லுங்கள் என்றுதான் கூறினேன்.
ஓட்டுப்போடும்போது மட்டும் விரலில் நான் கறை வைத்துக்கொள்கிறேன்.
சசிகலா வருவதை விரும்பவில்லை
நான் அரசியலை சாராதவனாக இருந்தாலும், எனக்கென்று அரசியல் சித்தாந்தங்கள் இருக்கின்றன.
மக்களுக்கு எது நல்லதோ அதை ஆதரிக்கிறேன். சசிகலா முதல்வர் ஆவதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.