டையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 13ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் குறித்த பிரேதேசத்திற்கு வட. மாகாண சபையினர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் கேப்பாப்பிலவிற்கு சென்று தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சொந்த மண்ணுக்காக இம்மக்கள் நடத்திவரும் போராட்டம் இரண்டு வாரங்களை தொடுகின்ற நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சொந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும்வரை தமது போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லையென இம் மக்கள் உறுதியாக உள்ளனர்.
இதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் 10ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடுகிறது.